Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெலிகாப்டர் விபத்து; பலியானவர்களில் 9 பேரை டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண முடிவு

டிசம்பர் 10, 2021 12:42

புதுடெல்லி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகாராவத் உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களின் உடல்கள் தீயில்கருகி அடையாளம் காணமுடியாதபடி இருந்ததால், உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்களது அங்க அடையாளங்களின்படி, உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணியில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். ஆனால், உடல்கள் சிதைந்துகாணப்பட்டதால் அங்க அடையாளங்களின்படி, சடலங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, உயிர் இழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டறிய அவர்களுக்கு டி.என்.ஏபரிசோதனை நடத்த ராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின்உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 பேரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த 9 பேரில் 4 பேரின் சடலங்கள் மிகவும் உருக்குலைந்து காணப்படுகின்றன. 4 சடலங்களும் துண்டு துண்டாக சிதறிக் கிடந்த நிலையில், விபத்து நடந்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டன. அடையாளம் தெரியாமல், சடலங்களை மாற்றி அனுப்பவும் முடியாது. எனவே, ராணுவ மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையின்போது, அடையாளம் தெரியாத 9 பேரின் உடல்களில் இருந்து, டி.என்.ஏ பரிசோதனைக்கு தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரிகளை பயன்படுத்தி,ஹெலிகாப்டரில் பயணித்த அந்த 9 வீரர்களின் உறவினர்களிடம் மாதிரிசேகரித்து டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்டு ஒப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் வரும் வரை சம்பந்தப்பட்ட 9 பேரின் உடல்களை பத்திரப்படுத்தி வைக்கவும் ராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்த பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட வீரர்களின் ரத்த வகை உறவினர்களிடம் மாதிரிகள் சேகரிக்கவும் ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்