Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 400 கன அடியாக அதிகரிப்பு

டிசம்பர் 11, 2021 10:07

மேட்டூர்:  ஒகேனக்கல்லில் நேற்று காலை 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 13 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 9 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் மேலும் அதிகரித்து 13 ஆயிரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. அதன் படி இன்றும் அணையில் இருந்து காவிரியில் 13 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் 28-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது.

தலைப்புச்செய்திகள்