Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்பது காலங்காலமாக உள்ள நடைமுறை: அமைச்சர் சேகர்பாபு

டிசம்பர் 16, 2021 03:11

திருச்சி : ''கோவில்களில், ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்பது, காலங்காலமாக உள்ள நடைமுறை. இது குறித்து சட்ட வல்லுனர்கள், கோவில்களின் தலைமை குருக்கள் மற்றும் முதல்வருடனும் கலந்து பேசி, முடிவை அறிவிப்போம்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருச்சி, வயலுார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற நிலையை மாற்றும் அரசாக செயல்படுகிறோம். ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த நடன கலைஞர் ஜாகிர் உசேனை தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக, கோவில் நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தி, அறிக்கை தருமாறு கேட்டுள்ளோம்.

கோவில்களில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்பது, காலங்காலமாக உள்ள நடைமுறைகளில் ஒன்று. சட்ட வல்லுனர்கள், கோவில்களின் தலைமை குருக்கள் ஆகியோருடனும், முதல்வருடனும் கலந்து பேசி, இது குறித்த முடிவை அறிவிப்போம். கடந்த 10 ஆண்டுகளாக, கோவில்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி, சட்டத்தில் கூறப்படும் சாத்தியக்கூறுகளின்படி, அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படும்.

அறநிலையத் துறை கோவில்களில், எந்த பூஜை வழிபாட்டு முறைகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள, தமிழக அரசு அனுமதிக்காது. கோவில் நடைமுறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நியாயமாகவும், நடுநிலையோடும் இருந்தால், அதை சரி செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்