Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

9 தொழிலாளர்கள் இறந்ததாக வதந்தி: யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு

டிசம்பர் 20, 2021 04:08

திருவள்ளூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாக்ஸ் கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலைபார்த்து வருகிறார்கள். அவர்களை தொழிற்சாலை நிர்வாகம் ஆங்காங்கே விடுதிகள் எடுத்து தங்க வைத்து உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூரில் உள்ள விடுதியில் தங்கி இருந்த பெண் தொழிலாளர்கள் தரமற்ற உணவை சாப்பிட்டதால் 200 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 9 பெண்கள் குறித்து வதந்தி பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிற்சாலை ஊழியர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திருச்சி வயலூர் ரோடு சண்முகா நகர் பகுதியை சேர்ந்த யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் தனது டுவிட்டர் மற்றும் யூ டியூப்பில் தரமற்ற உணவு சாப்பிட்ட 9 பெண்கள் பலி யாகியுள்ளனர் என பதிவிட்டு இருந்தார். இதனை தொழிற்சாலை ஊழியர்கள் குறித்த வதந்தி மேலும் பரவியது.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், கணேசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் தொழிலாளர்களிடம் வீடியோ காலில் கலெக்டர் ஆர்த்தி பேசி அவர்களது உடல்நிலை குறித்து அனைவருக்கும் தெரிவித்தார். இதையடுத்து தொழிலாளர்களின் 16 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

சமூக வலைதளங்களில் போய்யான தகவல்களை பரப்பியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்ந்து வதந்தி பரப்பியதாக சேலம் வளர்மதியை போலீசார் நேற்று கைது செய்து இருந்தனர்.

இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் நாகலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மாலை திருச்சி சண்முகா நகரில் வீட்டில் இருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்தனர்.

பின்னர் அவரை நேற்று இரவு திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். சாட்டை துரைமுருகனிடம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் மீது வன்முறையை தூண்டுதல், அவதூறு செய்தி பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று காலை சாட்டை துரைமுருகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் சப் ஜெயிலில் அடைத்தனர்.

இதற்கிடையே சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபுவுடன் வந்து திருச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் தனது கணவரை 7 பேர் கொண்ட போலீஸ் குழு கைது செய்து அழைத்து சென்றது. ஆனால் அவரை எங்கு வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. அவருக்கு தற்போது உடல் நிலை சரியில்லை. அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே கணவரை தேடி கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

சாட்டை துரைமுருகன் மீது ஏற்கனவே அவதூறு தகவல்கள் பரப்பியதாக பல மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கைதாகி தற்போது ஜாமீனில் வந்துள்ள சாட்டை துரைமுருகன் மீண்டும் அவதூறு பரப்பி போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்