Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீதிமன்ற குண்டு வெடிப்பில் கைதான விஞ்ஞானி தற்கொலை முயற்சி

டிசம்பர் 20, 2021 04:12

டெல்லி ரோகிணி நீதிமன்ற அறையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் உள்ள அறை எண் 102-க்குள் கடந்த டிசம்பர் 9-ம் தேதி திடீரென குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ.) பணிபுரியும் மூத்த விஞ்ஞானியான பாரத் பூஷன் கத்தரியா என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார்.

அவரிடம் குண்டுவெடிப்பு குறித்து விசாரித்தபோது, தனது அண்டை வீட்டுக்காரரான அமித் வஷிஸ்ட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையில் இருந்த பல வருட பிரச்சனையின் காரணமாக
அவரை கொல்வதற்கு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு தயாரித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து பாரத் பூஷன் கத்தரியாவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கண்டறியப்பட்ட அவரை மீட்டு போலீசார் அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானி கத்தாரியா கேள்விகளை புறக்கணித்து விசாரணை குழுவை தவறாக வழிநடத்துகிறார். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. விசாரணையை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து தெரிந்து வைத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்