Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எதிர்க்கட்சிகள் ஆலோசனை எதிரொலி: மந்திரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி

டிசம்பர் 20, 2021 04:38

12 மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில் பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. வருகிற 23-ந்தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதும் 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், மத்திய அரசு அவரது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு கட்சிகளுக்கு மட்டும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. அனைத்து கட்சிகளையும் அழைக்க வேண்டும். மத்திய அரசு எதிர்க்கட்சிகளை பிரிக்க பார்க்கிறது. நியாயமற்றது. துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லியாகர்ஜுன கார்கே தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகள் ஆலோசனை இன்று ஆலோசனை நடத்தின. அப்போது மாநிலங்களை எம்.பி.க்கள் சஸ்பெண்ட், லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சரை ராஜினாமா செய்யக்கோரி வலியுறுத்துவது போன்றவற்றை இரு அவைகளிலும் எடுத்துரைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,வெங்கையா நாயுடு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாராளுமன்றத்தில் எதிர்கொள்ள இருக்கும் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.  பிரதமர் உடனான ஆலோசனை கூட்டத்தில் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜுஜு மற்றும் சில அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் ‘‘அரசு அழைத்துள்ள ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. மத்திய உள்துறை இணைஅமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும். மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட்-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்க விடுக்க இருக்கிறோம். இரண்டு அவைகளிலும் பங்கேற்கமாட்டோம்’’ என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்