Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிக தங்கம் பறிமுதல்- சென்னை விமான நிலையத்திற்கு முதலிடம்

டிசம்பர் 22, 2021 03:47

ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும் விதவிதமாக தங்கம் கடத்தி வருவது நீடிக்கிறது. பெரும்பாலானோர் ‘குருவி’களாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருகிறார்கள். அவர்கள் மீதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மக்களவையில் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘நாட்டில் 2021-22 நிதியாண்டில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 130 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கொல்கத்தாவில் 128 கிலோவும், திருச்சி விமான நிலையத்தில் 78 கிலோவும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2020-2021 நிதி ஆண்டில் தங்கம் கடத்தல் வெகுவாக குறைந்துள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் டெல்லி, மும்பையில் அதிக அளவு கடத்தல் தங்கம் சிக்கியது. டெல்லியில் 484 கிலோவும், மும்பையில் 403 கிலோவும் தங்கம் பிடிபட்டது. கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018-19-ம் நிதியாண்டில் மும்பை விமான நிலையத்தில் 763 கிலோ தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் (கிலோ)

சென்னை

130

கொல்கத்தா

128

திருச்சி

78

டெல்லி

78

மும்பை

31

கொச்சி

62

வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தில் 2019-20-ம் ஆண்டு அறிக்கையின்படி நாடு முழுவதும் சுமார் 185 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது விமான நிலையம், துறைமுகம் மற்றும் தரை வழி, கடல்வழி கடத்தலில் அடங்கும்.

நாட்டில் தங்கம் கடத்தும் மிகப்பெரிய மையமாக சென்னை விமானநிலையம் உருவாகி உள்ளது. இதையடுத்து கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்