Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஞ்சள் பையை யாரும் அவமானமாக கருத வேண்டாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

டிசம்பர் 23, 2021 03:40

சென்னை: பிளாஸ்டிக் தடையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம் விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இதற்கான நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப் படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் இந்த கண்காட்சியை வந்து பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்று பேசினார்கள்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன்.

மஞ்சள் பை கொண்டு வந்தால், ‘வீட்டில் ஏதாவது விசே‌ஷமா? பத்திரிகை கொண்டு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்ட காலம் ஒன்று உண்டு.

அந்த மஞ்சள் பைதான் சூழலுக்கு, சுற்றுச்சூழலுக்கு சரியானது. அழகான, நாகரிகமான பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளைக் கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணம் ஆகும்.

இன்றைய நாள் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அந்தளவுக்குச் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு என்பது மனிதகுலத்தை மீளாத துயரத்தில் ஆழ்த்துவது.

வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பிறந்தநாள் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றும்போது, சுற்றுச்சூழல் பிரச்சனைதான் மானுடத்தின் மாபெரும் பிரச்சனை என்பதை நான் வலியுறுத்திச் சொன்னேன்.

அந்த சுற்றுச்சூழலுக்கு மிகக்கேடு விளைவிப்பதுதான் பிளாஸ்டிக். அந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தாக வேண்டும்.

இப்போது இந்த மஞ்சள் பை இருக்கிறது. பருத்தி செடியில் இருந்து பஞ்சு கிடைக்கிறது. அதில் இருந்து பருத்தி நூலை துணியாக நெய்கிறோம். பை தைக்கிறோம். அந்த பை கிழிந்தது என்றால் அதனை கரித்துணியாக மிதியடியாக வீட்டில் பயன்படுத்துகிறோம். அதுவும் சிக்கனத்துக்குப் பெயர்போன நமது பெண்கள் அதை முழுமையாக பயன்படுத்துவார்கள். அதன்பிறகு அது மக்கிவிடும். ஆனால், பிளாஸ்டிக் மக்காது. அதுதான் சுற்றுச்சூழலை கெடுக்கிறது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் அரசு செய்து வருகிறது.

அரசாங்கம் மட்டும் நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்.

மஞ்சள் பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டிய அவசியமில்லை.

சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை. அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்