Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு- மகாராஷ்டிராவில் ‘சதம்’ அடித்தது

டிசம்பர் 25, 2021 02:41

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மதியம் வரை நாடு முழுவதும் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் தாக்கம் பரவி இருந்தது. நேற்றுவரை 358 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம்.

அம்மாநிலத்தை சேர்ந்த 108 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38, கேரளாவில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இதுவரையில் ஏற்படவில்லை.

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 415 பேரில் 115 பேர் முழுமையாக குணமடைந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மற்றவர்களும் குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. என்றாலும், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசின் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

ஒமைக்ரானை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து புத்தாண்டு மற்றும் பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக (ஐ.சி.எம்.ஆர்.) தலைவர் பல்ராம் பார்கவா கூறியதாவது:-

நாட்டில் தற்போது வரை டெல்டா வகை கொரோனா தொற்று பரவல்தான் அதிகமாக உள்ளது. டெல்டா வகை தொற்றைவிட ஒமைக்ரான் வேகமாக பரவும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1.5 முதல் 3 நாள்களுக்குள் இரட்டிப்பாகிறது.

கொரோனா தொற்று பரவலின் 4-வது அலையை உலகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா பரிசோதனை - பாதிப்பு விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது. எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

பண்டிகை காலம் நெருங்குவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில் மக்கள் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதையும் அவசியமற்ற பயணங்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச்சேர்ந்த 415 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 183 பேர் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு நடத்தப்பட்டோரில் 121 பேர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் ஆவர். 91 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள். 3 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் (பூஸ்டர்) செலுத்திக் கொண்டவர்கள். 70 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. 61 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர்.

கேரளா, மிசோரம் ஆகியவற்றில் கொரோனா பரிசோதனை - பாதிப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. நாட்டில் 20 மாவட்டங்களில் அந்த விகிதம் 5 முதல் 10 சதவீதத்துக்குள் உள்ளது. 2 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

நாட்டில் தகுதியான நபர்களில் 61 சதவீதம் பேர், இரு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 89 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தயார்நிலையில் இருக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்