Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்லூரி மாணவி உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியது எப்படி?- சுகாதாரத்துறை தீவிர விசாரணை

டிசம்பர் 30, 2021 11:04

புதுச்சேரி: புதுவையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் புதிய அச்சுறுத்தலாக ஒமைக்ரான் தொற்று 2 பேரை பாதித்துள்ளது. 80 வயது முதியவர், 20 வயது கல்லூரி மாணவி என 2 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் முதியவர் கொரோனா நோயாளியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கல்லூரி மாணவி வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார். அவர்களுக்கு கொரோனா தொற்று எவ்வாறு பரவியது என்பது தொடர்பாக இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை குழு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்ட 2 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்தவித நேரடி தொடர்பிலும் இல்லை. மேலும் இருவரும் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். அதுமட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் யாரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு தொற்று பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதனால் ஒமைக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்கனவே கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனையில் 180 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மேலும் படுக்கைகளை தயார் செய்ய ரோடியர் மில் வளாகத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் பார்வையிட்டு சென்றுள்ளார்.

தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படும் நிலையில் மேலும் படுக்கை வசதி, ஆக்சிஜன் செலுத்தும் வசதி உள்ளிட்டவைகளை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் புதுவையில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேளிக்கை நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றினால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்