Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் அதிவேகத்தில் பரவும் கொரோனா தொற்று

ஜனவரி 01, 2022 11:03

புதுடெல்லி: ஒமைக்ரான் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், கொரோனா தினசரி பாதிப்பும் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி பாதிப்பு 6,358 ஆக இருந்தது. மறுநாள் 9,195, அதற்கு மறுநாள் 13,154, வியாழக்கிழமை 16,764 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,775 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று 35 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு கடந்த 4 நாட்களில் சுமார் 4 மடங்கு வரை அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்பு 3 கோடியே 48 லட்சத்து 61 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 5,368 ஆக இருந்த நிலையில், நேற்று 50 சதவீதம் உயர்ந்து புதிதாக 8,067 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தலைநகர் மும்பையில் மட்டும் 5,428 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

மேற்கு வங்கத்திலும் புதிய பாதிப்பு 62 சதவீதம் உயர்ந்தது. அதாவது, நேற்று முன்தினம் 2,128 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக 3,451 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் தினசரி பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2-வது இடத்திற்கு மேற்கு வங்கம் சென்றது.

டெல்லியில் புதிதாக 1,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று முன்தினத்துடன் (1,313) ஒப்பிடுகையில், 37 சதவீதம் அதிகம் ஆகும்.

இதேபோல நேற்று அசாமில் 90 சதவீதம், ஜார்கண்டில் 56 சதவீதம், அரியானாவில் 43 சதவீதம், பஞ்சாபில் 32 சதவீதம், தமிழ்நாட்டில் 30 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 30 சதவீதம் பாதிப்பு உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட இறப்புகளையும் சேர்த்து 353 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 406 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,81,486 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 8,949 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 75 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கு முன்பு 75 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது.

ஆனால் இன்றைய நிலவரப்படி, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,04,781 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 13,420 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட 145 கோடியே 16 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதில் நேற்று மட்டும் 58,11,487 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 67.89 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்று மட்டும் 11,10,855 மாதிரிகள் அடங்கும்.

தலைப்புச்செய்திகள்