Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டியது

ஜனவரி 02, 2022 11:02

புதுடெல்லி: நாடு முழுவதும் இதுவரை 145 கோடியே 44 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 25,75,225 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாதிப்பு 6,358 ஆக இருந்தது. மறுநாள் பாதிப்பு 9 ஆயிரத்தையும், அதற்கு மறுநாள் 13 ஆயிரத்தையும் கடந்தது. 30-ந் தேதி நிலவரப்படி, பாதிப்பு 16,764 ஆகவும், 31-ந் தேதி 22,775 ஆகவும் அதிகரித்த நிலையில், நேற்று 27 ஆயிரத்தை தாண்டியது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,553 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டள்ளதாக கூறி உள்ளது.

இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 22 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 5 நாட்களில் மட்டும் பாதிப்பு 4½ மடங்கு அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.நாட்டின் மொத்த பாதிப்பு 3 கோடியே 48 லட்சத்து 89 ஆயிரத்து 132 ஆக உயர்ந்தது.

நேற்று அதிகபட்சமாக மராட்டியத்தில் 9,170 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு நேற்று முன்தினம் 8,067 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 14 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் புதிதாக 6,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் நேற்று முன்தின பாதிப்பு 3,451 ஆக இருந்த நிலையில், நேற்று 31 சதவீதம் அதிகரித்தது. அங்கு புதிதாக 4,512 பேருக்கு தொற்று உறுதியானது. மாநில தலைநகரான கொல்கத்தாவில் மட்டும் 2,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் கொரோனா பரவல் சதவீதம் 8.46-ல் இருந்து 12-ஐ தாண்டி உள்ளது.

டெல்லியில் நேற்று பாதிப்பு 51 சதவீதம் அதிகரித்து 2,716 ஆக உயர்ந்தது. கேரளாவில் 2,435 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் 281 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அங்கு நேற்று முன்தினம் 158 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 78 சதவீதம் அதிகரித்துள்ளது.

குஜராத்தில் தினசரி பாதிப்பு 654-ல் இருந்து நேற்று 64 சதவீதம் உயர்ந்தது. இங்கு புதிதாக 1,069 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதேபோல நேற்று மத்திய பிரதேசத்தில் 61 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 53 சதவீதம் பாதிப்பு உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 241 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 284 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,81,770 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 9,249 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 84 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1,22,801 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தை விட 18,020 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 145 கோடியே 44 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 25,75,225 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 10,82,376 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மொத்த பரிசோதனை எண்ணிக்கை 68 கோடியை கடந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்