Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்த நாடும் உறுதுணையாக உள்ளது: பிரதமர்

மே 04, 2019 05:23

புதுடெல்லி: சென்னை அருகே வங்கக்கடலில் உருவாகி, தமிழ்நாட்டை தாக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திய ‘பானி’ புயல் திடீரென பாதை மாறியது. அது தீவிர புயலாக மாறி, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா நோக்கி சென்றது. 

இந்த புயல் நேற்று முன்தினம் ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்த ‘பானி’ புயல் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று காலை 8.30 மணி அளவில் கரையை கடந்தது.

பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் விழுந்தன. 

இதனால் மின் வினியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 147 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பானி புயல் சேதம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், பானி புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் கேட்டறிந்தேன். பானி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது. 

ஒடிசா மாநிலத்தின் நிவாரண பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பு, நிதிகளை மத்திய அரசு வழங்கும்” என தெரிவித்துள்ளார். பானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட ஒடிசாவுக்கு  6 ஆம் தேதி செல்ல இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்