Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடியை திமுக அரசு வரவேற்பது ஏன்?: கனிமொழி விளக்கம்

ஜனவரி 03, 2022 11:31

சென்னை: ''மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க வருகை தரும், பிரதமர் மோடியை தி.மு.க., அரசு எதிர்க்கவில்லை,'' என, கனிமொழி எம்.பி., கூறினார்.

பள்ளி கல்வித் துறையின் இல்லம் தேடி கல்வி திட்டம்; லயோலா கல்லுாரி மாணவர்கள் அரவணைப்பு மையம் உள்ளிட்டவை இணைந்து, நாட்டுப்புற கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவை, சென்னை லயோலா கல்லுாரியில்  நடத்தின.

விழாவில், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி பேசியதாவது: தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு தழைத்தோங்கவும், பாதுகாக்கவும், 'சென்னை சங்கமம்' நடத்தப்பட்டது. தொடர்ந்து அதை நடத்த முடியவில்லை என்றாலும், சென்னை சங்கமத்தின் வெற்றியை, லயோலா கல்லுாரி சமூக செயல்பாட்டுடன் நடத்துகிற கலை நிகழ்ச்சிகளில் காண முடிகிறது.

மக்களுக்கு கலைகளை கொடுத்து வரும் நாட்டுப்புற கலைஞர்களை போற்றி கொண்டாட வேண்டும். கொரோனா தொற்று பரவல் காலத்தில், நாட்டுப்புற கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் கட்டமைப்பு வசதியை, தமிழக அரசு ஏற்படுத்தி தரும். இவ்வாறு அவர் பேசினார்.

விழா முடிந்த பின் கனிமொழி அளித்த பேட்டி: மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க, பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது வருகையை தி.மு.க., அரசு எதிர்க்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை துவக்கி வைக்க வந்த பிரதமரை, தி.மு.க., எதிர்த்தது குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

அரசு என்பது வேறு; கருத்தியல் என்பது வேறு. மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளையும், சட்டங்களையும், முந்தைய அ.தி.மு.க., அரசு ஆதரித்தது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமை சட்டங்கள் போன்ற மக்களுக்கு எதிரான சட்டங்களையும் அ.தி.மு.க., ஆதரித்தது. ஆனால், தி.மு.க., எதிர்த்தது.எனவே, இந்த விவகாரத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்