Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஜனவரி 03, 2022 12:51

சென்னை: ஒமைக்ரான் என்னும் புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்த உறுதி ஏற்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை சைதாபேட்டை உள்ள பள்ளியில் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூலம் கோவாக்சின் தடுப்பூசியை தமிழகத்தில் 33 லட்சம் சிறார்களுக்கு ஒருமாதத்தில் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: ஒமைக்ரானில் இருந்து நம்மை தடுக்கும் கேடயம் முகக்கவசம் என்பதால் அனைவரும் அணிய வேண்டும்.

தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில் ஒமைக்ரான் மிரட்டத் தொடங்கியுள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால் மாணவ, மாணவிகள் மிகவும் பாதுகாப்புடன் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் குறைந்த அளவே இருந்தாலும், அது மிகவும் வேகமாக பரவி வருவதை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு, மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

தடுப்பூசிகள், நோய் எதிர்ப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பு விகிதம் குறைவாகதான் இருக்கிறது. புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்த உறுதி ஏற்போம். அனைத்திலும் தமிழகம் முதலிடத்தில் இருப்பதைபோல், நோயில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் என்ற பெயரையும் தமிழகம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்