Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பறவை காய்ச்சல் எதிரொலி; கேரளாவில் இருந்து கோழி வரத்துக்கு தமிழக அரசு தடை

ஜனவரி 05, 2022 10:29

சென்னை: பறவை காய்ச்சல் பரவலை தடுக்க, கேரளாவில் இருந்து கோழி, வாத்து மற்றும் அவை சார்ந்த பொருட்கள் அனைத்தையும், வாகனங்களில் எடுத்து வர தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று பரவாமல் தடுக்க, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன் விபரம்: கேரளா எல்லையில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 26 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 1,061 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவினர் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள், அதன் முட்டைகள், கோழியினம் சார்ந்த பொருட்கள் தமிழக எல்லைக்குள் நுழையாத வகையில், தடை விதித்து திருப்பி அனுப்புகின்றனர்.

தமிழகத்தில் நுழையும் வாகனங்களும், கிருமி நாசினி தெளித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப் படுகின்றன.பறவை காய்ச்சல் தொடர்பான விபரங்களை பெற, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவில், முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர், பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவரை, 044 - 2433 9097, 94450 32504 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். கோழி இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில், நோய் தாக்கம் மற்றும் இறப்பு குறித்து கண்காணிக்கப்படுகிறது. பறவைகள் சரணாலயம், விலங்கியல் பூங்காக்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு, இறப்பு ஏற்பட்டால், உடனே கால்நடை மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினர் வழியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளா தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து, கோழி குஞ்சுகள், முட்டைகள், தீவனம் போன்ற பொருட்களை பெறுவதாக இருந்தால், உரிய அரசு அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்ற பின் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும், தீவிர உயிரி பாதுகாப்பு நடைமுறைகளை கையாள அறிவுறுத்தப் பட்டுள்ளது.இவ்வாறு கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்