Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் நிகழ்ச்சிகள் ரத்து பஞ்சாப் காங்கிரஸ் அரசு செய்த தந்திரம்: ஜே.பி.நட்டா கண்டனம்

ஜனவரி 05, 2022 05:56

புதுடெல்லி: பஞ்சாபில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை தடுக்க அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிந்தவரை அனைத்து தந்திரங்களையும் செய்ததாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது. இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி, பகத்சிங் மற்றும் பிற தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், முக்கிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று அவர்கள் கவலைப்படவில்லை.

பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு, தங்களின் மலிவான செயல்களால், தாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்காதவர்கள் என்றும் வெளிப்படையாகவே காட்டியுள்ளது.

பஞ்சாபில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை தடுக்க முடிந்தவரைஅனைத்து தந்திரங்களையும் செய்தது.

மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் பஞ்சாப் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக உத்தரவாதம் அளித்தனர்.

அதே நேரத்தில் பிரதமர் செல்லும் வழியில் போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிரதமரைப் பொறுத்த வரையில் இந்தச் சம்பவம் ஒரு பெரிய பாதுகாப்புக் குறைபாடாகும்.

பேரணியில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்குமாறு மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. காவல்துறையினரின் மித மிஞ்சிய செயல்பாடுகள் மற்றும் போராட்டக்காரர்களுடன் ஒத்துழைத்ததால் ஏராளமான பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

அனைத்தையும் விட நிலைமையை மோசமாக்கும் வகையில் பஞ்சாப் முதல்வர் சன்னி தொலைபேசியில் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்.

பஞ்சாபில் காங்கிரஸ் அரசு கையாளும் உத்திகள் ஜனநாயகக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட எவரையும் வேதனைப்படுத்தும்.

பஞ்சாப் மாநிலத்துக்கான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு பிரதமரின் வருகை சீர்குலைத்தது வருத்தமளிக்கிறது. ஆனால் இதுபோன்ற மலிவான மனநிலை பஞ்சாபின் முன்னேற்றத்தைத் தடுக்காது, பஞ்சாபின் வளர்ச்சிக்கான முயற்சியைத் தொடருவோம்.

இவ்வாறு ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்