Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா 3-வது அலை: ஒரே நாளில் 56 சதவீதம் உயர்வு

ஜனவரி 06, 2022 10:22

புதுடெல்லி: நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,85,401 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 71,397 அதிகம் ஆகும்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையை விட 3-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு நாள்தோறும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 27-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 6,358 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து நேற்றுமுன்தினம் 58,097 ஆக உயர்ந்த நிலையில் நேற்று ஒரேநாளில் சுமார் 56 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே நேற்றுமுன்தினமும் பாதிப்பு 56 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருப்பது 3-வது அலையின் வேகத்தை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286 ஆக உயர்ந்தது.

முதல் இரண்டு அலைகளை போல 3-வது அலையிலும் அதிக பாதிப்பை சந்திக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு புதிய பாதிப்பு 18,466-ல் இருந்து 26,538 ஆக உயர்ந்தது.

அம்மாநிலத்தின் தலைநகரான மும்பையில் பரவல் வேகம் அதிவேகமாக இருக்கிறது. மும்பையில் பாதிப்பு ஒரே நாளில் 56 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து நேற்று மட்டும் 15,014 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

மேற்குவங்கத்தில் புதிதாக 14,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொல்கத்தாவில் மட்டும் 6,170 பேர் அடங்குவர். டெல்லியில் 10,665 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 4,862, கேரளாவில் 4,801, கர்நாடகாவில் 4,246, ஜார்கண்டில் 3,553, குஜராத்தில் 3,350 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட இறப்புகளையும் சேர்த்து 258 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 325 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை பலியானோர் எண்ணிக்கை 4,82,876 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 1,41,581 பேர் அடங்குவர்.

கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 19,206 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 41 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,85,401 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 71,397 அதிகம் ஆகும். ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பு மட்டுமே இருப்பது சற்று நிம்மதியாக தருகிறது. வெகு சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 91,25,099 டோஸ் தடுப்பூசிகள்  மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 148 கோடியே 67 லட்சத்தை கடந்துள்ளது.

தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று 14,13,030 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 68.53 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்