Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரையும் தருவேன்: பஞ்சாப் முதல்வர் விளக்கம்

ஜனவரி 06, 2022 10:34

சண்டிகர்:  பிரதமரின் நிகழ்ச்சிக்கு 70,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஆனால் 700 பேர் தான் வந்தனர் என சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.

பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 42,750 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்க இருந்தார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு முன் ஹுசைனிவாலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்குள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருந்தார். ஆனால் மழை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் வாகனம், ஹுசைனிவாலாவை சென்றடைய 30 கி.மீ. தூரம் இருந்தபோது, வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்புக்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டன. 

பிரதமரின் கான்வாய் 20 நிமிடங்கள் வரை அங்கேயே நின்றது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, பிரதமர் டெல்லி திரும்பினார். 

இந்த சம்பவத்திற்கு உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் பஞ்சாப் அரசையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது:-

நாங்கள் பிரதமரை மதிக்கிறோம். பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரையும் தருவேன். ஆனால் பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தது. எனது செயலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் பிரதமரை வரவேற்க நான் நேரில் செல்லவில்லை. பாஜவினர் தான் இந்த விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.

பிற்பகல் 3 மணிக்குள் சாலைகளில் இருந்து செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களிடம் நான் கோரிக்கை விடுத்திருந்தேன். பிரதமரின் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்காக நாற்காலிகளை பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் 700 பேர்தான் நிகழ்ச்சிக்கு வந்தனர். இதன் காரணமாகவே அவர்கள் மழை, பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி என பல்வேறு காரணங்களை கூறி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்.

இவ்வாறு சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளித்தார்.

தலைப்புச்செய்திகள்