Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 மாநில தேர்தலில் பாஜக தோற்பது உறுதி: டி.ராஜா ஆருடம்

ஜனவரி 07, 2022 11:48

சென்னை: உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோற்பது உறுதி என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயக நெறிமுறைகள், கூட்டாட்சித் தத்துவத்தை தகர்க்கும் வகையில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கிறது. அதிகாரங்களை மத்தியில் குவித்து மாநில மக்களின் உணர்வுகளுக்கு மாறாக செயல்படுகிறது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை,கல்வியை வணிகமயமாக்குவதோடு, கல்வியில் இதுவரை மாநிலங்களுக்கு இருந்த உரிமைகளைபறிக்கிறது. நாட்டின் சொத்தானபொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயாக்குவது தேசவிரோதசெயலாகும். தனியார்மயாக்கும்போது மாநில அரசுகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மோடிஅரசு செயல்படுவது, நீட் தேர்வில்இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும்வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பது, நீட் தேர்வு தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சி எம்பி.க்கள் குழுவை மத்தியஅமைச்சர் அமித் ஷா சந்திக்கமறுப்பது ஆகியவை கண்டனத்துக்கு உரியது.

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க மோடி அரசு அகற்றப்பட வேண்டும். அதற்கு, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

பாஜகவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கிவிட்டனர். விரைவில் நடைபெறவுள்ள உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைவது உறுதி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடக்க உள்ளது.

பஞ்சாபில் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு பஞ்சாப் மாநில அரசை குறைகூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநிலசெயற்குழு உறுப்பினர் ந.பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்