Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு; மார்ச்.10 ல் வாக்கு எண்ணிக்கை

ஜனவரி 08, 2022 06:46

புதுடெல்லி: உ.பி.,யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் உத்தர்காண்ட், பஞ்சாப், கோவா மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான தேதிகளையும் அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:

5 மாநிலங்களிலும் 690 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டில், கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அது, தேர்தல் நடத்துவதில் பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய மாநில சுகாதார செயலர்கள், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தோம். உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்தல் நடக்கும். கோவிட் பரவல் அதிகரிக்காத வகையில் தேர்தல் நடத்த உள்ளோம்.

வாக்காளர்கள் எண்ணிக்கை

இந்த தேர்தலில் 18.34 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். அவர்களில் 8.55 கோடி பேர் பெண்கள். முதல்முறை ஓட்டுப்போட உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 24.9 லட்சம் பேர். அதில் 11.4 லட்சம் பேர் பெண்கள்.

ஒரு ஓட்டுச்சாவடியில் 1,250 முதல் 1500 பேர் வரை மட்டும் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5 மாநிலங்களிலும் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 2,15,368 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடிகளும் தரைதளத்தில் அமைக்கப்படும். 80 வயது முதியவர்கள் மற்றும் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தவாறு தபால் மூலம் ஓட்டுப்போடலாம்.

தேர்தலை 900 பார்வையாளர்கள் கண்காணிப்பாளர்கள். வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இதனை பயன்படுத்த அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். தேர்தல் தொடர்பாக இ விஜில் ‛ஆப்' மூலம் பொது மக்கள் புகார் அளிக்கலாம்.

தேர்தலின் போது இலவச பொருள், பணம் வழங்கப்படுவது தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலுக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தேர்தல் பணியாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்பட்டு கூடுதல் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 5 மாநிலங்களிலும் பரவலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு விட்டது. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் 15 கோடி பேர் முதல் டோசும், 9 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

பிரசாரங்களுக்கு கட்டுப்பாடு

கோவிட், ஒமைக்ரான் பரவல் காரணமாக ஓட்டுப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். அரசியல் கட்சிகள் முடிந்த வரை டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரசாரம் செய்யலாம். ஜன.,15 வரை பேரணி, பாதயாத்திரை போன்றவற்றில் எந்த கட்சிகளும் ஈடுபட கூடாது. வெற்றி கொண்டாட்டங்கள், கூட்டங்கள் நடத்த அனுமதிக்க மாட்டோம். வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். சமூக வலைதளங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.

தேர்தல் அட்டவணை

உ.பி.,யில் 403 தொகுதிகள்(7 கட்டங்களாக தேர்தல்)

ஓட்டுப்பதிவு நடக்கும் நாட்கள் :
பிப்.,-10(வியாழன்),
பிப்.,-14( திங்கள்)
பிப்.,20(ஞாயிறு)
பிப்.,23(புதன்),
பிப்.,27(ஞாயிறு)
மார்ச் -03(வியாழன்)
மார்ச்-07(திங்கள்)

உத்தர்கண்டில் 70 தொகுதிகள்( ஒரே கட்ட தேர்தல் )

ஓட்டுப்பதிவு: பிப்.,14(ஞாயிறு)

பஞ்சாபில் 117 தொகுதிகள் ( ஒரே கட்ட தேர்தல் )

ஓட்டுப்பதிவு : பிப்.,14(ஞாயிறு)

மணிப்பூரில் 60 தொகுதிகள்(2 கட்டங்களாக தேர்தல்)

ஓட்டுப்பதிவு : பிப்.,27(ஞாயிறு), மார்ச் 03( வியாழன்)

கோவாவில் 40 தொகுதிகள்( ஒரே கட்ட தேர்தல் )

ஓட்டுப்பதிவு : பிப்.,14(ஞாயிறு)

ஒரே நாளில் ஓட்டு எண்ணிக்கை

அனைத்து மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 10 ம் தேதி எண்ணப்படும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்