Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் மீ்ண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று

ஜனவரி 11, 2022 10:51

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை, 4,072 தெருக்களில் தொற்று பாதிப்பு கண்டு அறியப்பட்டுள்ளது. தினசரி சராசரி பாதிப்பு எண்ணிக்கை, 5,000ஐ கடந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வீட்டு தனிமையில் உள்ளவர்களும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில், டிசம்பர் 26ம் தேதிக்கு முன்பு வரை, தினசரி கொரோனா தொற்று பாதிப்பு, 150 என்ற சராசரி எண்ணிக்கையில் இருந்தது. அதன்பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளியிடமிருந்து டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ மாணவர்கள், பிற நோயாளிகளுக்கு தொற்று பரவியது. மேலும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால், சென்னையில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவ துவங்கியது.

தற்போது, சென்னை மாநகராட்சியில், தினசரி சராசரியாக, 5,000க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்படுவதாக, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
சென்னையில் 39 ஆயிரத்து 537 தெருக்கள் உள்ளன. முதல் அலையில் இருந்து துவங்கி இதுவரை, 35 ஆயிரத்து 465 தெருக்களில் வசிப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவல்களின் படி, தற்போது, 4,072 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இதில், 3,260 தெருக்களில், மூன்றுக்கும் குறைவானோருக்கு கொரோனா தொற்று உள்ளது.

மூன்று பேருக்கும் அதிகமாக, 812 தெருக்களில் தொற்று பதிவாகியுள்ளது. 472 தெருக்களில், நான்கிற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 293 தெருக்களில் ஐந்து பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது. இதைத் தவிர, புறநகர் மாவட்டங்களிலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா பரவலை தடுக்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த, பெற்றோர் முன்வர வேண்டும். அதேபோல், முதியோர், நாள்பட்ட நோயாளிகள், ஏப்., 14ம் தேதிக்கு முன்னதாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருந்தால், அவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களால், 30 சதவீத குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வீட்டுத் தனிமையில் உள்ளோர், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். வீட்டில் இருந்தாலும், வெளியே சென்றாலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

தலைப்புச்செய்திகள்