Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை அரசு வழங்குகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஜனவரி 11, 2022 12:38

சேலம்: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.   

அதேபோல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது குறித்த வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது : 

பொங்கல் பரிசு தொகுப்பில்  21 பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஒரு சிலருக்கு 15 பொருட்களும், ஒரு சிலருக்கு 18 பொருட்களும் கிடைக்கின்றன. திருவண்ணாமலையில் உள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம் தரமானதாக இல்லை என்று புகார் எழுந்துள்ளது. பொங்கல் தொகுப்பு பொருட்களை எடுத்துச் செல்ல பை வழங்கப்படுவதில்லை. மேலும் பொருட்கள் தரமானதாக இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தமது பேட்டியின் போது குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்