Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இனிய பொங்கல், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்: ஸ்டாலின் அறிக்கை

ஜனவரி 12, 2022 02:11

சென்னை: தை முதல் நாளான பொங்கல் திருநாளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியதுடன், தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் சேர்த்தே கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு தற்போது சித்திரை 1ம் தேதியாக இருக்கும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தை 1ம் தேதிக்கு தமிழ் புத்தாண்டை மாற்றப்போவதாக பல தகவல்கள் வெளிவந்தன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துடன், தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்! இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும்! தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மானத் திருநாள், அவர்களின் அயராத உழைப்பிற்கு அரிய துணையாகும் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள், மரபார்ந்த மனங்கவர் கலைகளையும் வீர விளையாட்டுகளையும் வெளிப்படுத்தும் திருநாள்.

இப்படித் தனித்தனியாக வகைப்படுத்திச் சொல்லாமல் அனைத்தையும் இணைத்து ஒட்டுமொத்தமாக, 'தமிழர் திருநாள்' என, பூமிப் பந்தில் தமிழர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அங்கெல்லாம் போற்றப்படும் பொங்கல் நன்னாளில் இனிய வாழ்த்துகளை உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தெரிவித்து உள்ளத்தில் உவகை கொள்கின்றேன்.

மக்கள் நலனை மனதில் முழுமையாகக் கொண்டு, கட்டுப்பாடு காத்து, கடமை உணர்வுடன், கண்ணியம் மிளிர்ந்திடச் செயல்படும் உடன்பிறப்புகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் நானும் திளைப்பேன். தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்! தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும்! அனைவருக்கும் தை முதல் நாளாம், இனிய பொங்கல் - இன்பத் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு தினம் குறித்த மாறுபட்ட கருத்துகளும், எதிர்ப்புகளும் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது சித்திரை 1ம் நாள் தமிழ் புத்தாண்டு என அரசாணையில் இருக்கும் நிலையில், ஸ்டாலின் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தெரிவித்தது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தலைப்புச்செய்திகள்