Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவின் எவ்வித சவாலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது: தளபதி நரவானே

ஜனவரி 12, 2022 04:33

புதுடெல்லி: எதிர்காலத்தில் இந்தியா மீது திணிக்கப்படும் எந்த சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். சீன ராணுவத்தை உறுதியுடன் எதிர்கொண்டு கையாள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ராணுவ தினம் நெருங்குவதை முன்னிட்டு நிருபர்களை சந்தித்த ராணுவ தளபதி எம்எம் நரவானே கூறியதாவது: மேற்கு எல்லை பகுதியில், பல்வேறு முகாம்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவல் முயற்சிகளும் நடக்கிறது. இது நமது அண்டை நாட்டின் மோசமான எண்ணத்தை அம்பலப்படுத்துகிறது.

லடாக் பிராந்தியத்தில் சில இடங்களில் படைகள் திரும்ப பெறப்பட்டாலும், அச்சுறுத்தல் குறையவில்லை. சீன ராணுவத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், படைகளின் செயல்பாடுகளை எப்போதும் தயார் நிலையில் வைத்துள்ளோம். வடக்கு எல்லைகளின் உள்கட்டமைப்பை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முழுமையாகவும் விரிவாகவும் நடைபெறுகிறது.

சீன ராணுவத்தின் புதிய எல்லை சட்டங்கள் மூலம், எந்தவொரு ராணுவ மாற்றங்களையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. பிற நாடுகளுக்கு உடன்படாத, சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் கடந்த காலங்களில் நாம் செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கு இணங்காத எந்த சட்டமும் வெளிப்படையாக நம்மை கட்டுப்படுத்த முடியாது. சீன ராணுவத்தை உறுதியுடனும், ஆக்கப்பூர்வமாகவும் கையாளுவோம்.

சீனாவுடன் ராணுவ ரீதியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நம் மீது திணிக்கப்படும் எந்த சவாலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இதனை நான் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். போர் அல்லது மோதல் எப்போதும் கடைசி முயற்சியாக தான் இருக்கும். இது துவக்கப்பட்டால், அதில் நாம் வெற்றி பெற தயாராக உள்ளோம்.

கடந்த டிச.,4ல் நாகாலாந்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் சமர்ப்பிக்கப்படும். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ நடவடிக்கையின் போதும், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்