Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகாரத்தை பிடிக்க பாஜக குறுக்கு வழியில் செல்லக்கூடாது: நாராயணசாமி அறிவுரை

ஜனவரி 15, 2022 04:20

புதுச்சேரி: இனியாவது மோடியும், அமித்ஷாவும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க குறுக்கு வழியில் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தக்கூடாது என நாராயணசாமி கூறினார்.

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் புதுவையில் விதைத்த விதையை இப்போது உத்தரபிரதேசத்தில் அறுவடை செய்கின்றனர். கடந்த ஆண்டு புதுவையில் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினர். 

வருமான வரித்துறை,  அமலாக்க பிரிவு, மத்திய உளவுத்துறை மூலம் மிரட்டி வழக்கு போடுவோம் எனக் கூறி தங்கள் பக்கம் இழுத்தனர். புதுவையில் காங்கிரஸ்  கூட்டணியை தோற்கடிக்க பா.ஜ.க. கடைபிடித்த யுக்தி இப்போது உத்தரபிரதேசம், கோவா, ஜார்கண்ட் மாநிலங்களில் திருப்பி அடிக்கிறது.  

மோடியும், அமித்ஷாவும் அரசியல் கட்சி நடத்தாமல் வியாபார நிறுவனம் நடத்துகின்றனர். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி  கவிழ்ப்பு செயலை செய்கின்றனர். கொள்கை இல்லாமல் பணம், அதிகார பலத்தை நம்பி தேர்தலை சந்திப்பவர்களுக்கு அழிவு காலம்  வெகுதூரத்தில் இல்லை. இனியாவது மோடியும், அமித்ஷாவும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க குறுக்கு வழியில் பண பலத்தையும், அதிகார  பலத்தையும் பயன்படுத்தக்கூடாது. அந்த ஆட்சி நிலைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

புதுவையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால் அரசு விழிப்போடு செயல்பட வேண்டும். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்