Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தரகண்ட் புதிய கருத்துக்கணிப்பு: பாஜகவை முந்தும் காங்கிரஸ்

ஜனவரி 18, 2022 11:33

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அங்கு காங்கிரஸின் கை ஓங்கி இருக்கிறது. ஆனால் உத்தரகாண்ட் தேர்தல் முடிவுகள் கடைசிநேரத்தில் இழுபறியாகவும் மாற வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது. 

 பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி தொடங்கி மார்ச் வரை நடைபெறும். உத்தரகாண்ட் மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் ரேஸ் நடக்கிறது. இதில் தற்போதுவரை இரு கட்சிகளும் மாறி மாறி முன்னேறி வருகின்றன.

2017ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த வருடம் முதலமைச்சர் பதவியில் இருந்து திரிவேந்திர சிங் ராவத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீரத் சிங் ரவாத் முதல்வராக நியமிக்கப்பட்டார். முதல்வர் வேட்பாளர் பாஜக-வின் தீபக் சிங் ரவாத் சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. அதனால் அவரை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்க அந்த சமயத்தில் வாய்ப்பு இல்லை என்பதால் புஷ்கர் சிங் தாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். 

முதல்வராக புஷ்கர் இருந்தாலும் அங்கு முதல்வர் வேட்பாளர் மாற்றப்படலாம் என தெரியவருகிறது. புஷ்கர் சிங்குக்கு போட்டியாக அனில் பாலுனி இருக்கலாம் என கருதப்படுகிறது. பாஜக தரப்பு இப்படி இருக்க, காங்கிரஸ் தரப்பு இப்போதுதான் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவுக்கு வந்திருக்கிறது. 

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கும், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியாலுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. ராகுல் காந்தி தலையிட்டு, ஹரீஷ் ராவத்துக்கு பச்சைக்கொடி காட்டினார்.  அதேநேரம், உத்தராகண்ட் மாநில காங்கிரசின் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்தியாயாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காங்கிரஸ் தலைமை நீக்கியுள்ளது. இது தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பவும் வாய்ப்புள்ளது. அதேசமயம் பாஜக-வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சிலர் மாற இருப்பதாகவும் தெரியவருகிறது. 

ஹரிஷ் ராவத் உத்தரகாண்ட் மாநிலத்தின் வனத்துறை அமைச்சராக இருந்த ஹரக் சிங் ரவாத்,பாஜக-வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக கருதப்படும் ஹரிஷ் ராவத் முன்னிலையில் விரைவில் ஹரக் சிங் ரவாத் காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார் என உத்தராகண்ட் மாநில அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

 பாஜக-வுக்கு காங்கிரஸ் தாண்டி, ஆம் ஆத்மி கட்சியும் பலத்த போட்டியைக்கொடுக்கிறது. ஆம் ஆத்மியின் அஜய் கோத்தியால் தலைமையில் உத்திரகாண்ட் தேர்தலில் அக்கட்சி கணிசமான இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்படுகிறது. கார்வால் பகுதியில் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு இருப்பதால் அங்கு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது அக்கட்சி. 

உத்தரகாண்டில் வெற்றி பெற கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது காங்கிரஸ் கட்சி. அங்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், அதிகபட்சம் 50 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட நினைகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளை அங்கிருக்கும் கட்சிகளுக்குப் பகிர்ந்துகொடுத்து கூட்டணியை பலப்படுத்த நினைக்கிறது காங்கிரஸ்.  

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கருத்துகணிப்புகளும் தேர்தல் குறித்த கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், உத்திரகாண்டில், காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ராவத் முதல்வர் ரேசிஸ் முந்துகிறார். அடுத்த இடத்தில் தற்போதைய முதல்வர் புஷ்கர் இருக்கிறார். ஹரீஷ் ராவத்துக்கு 43%, புஷ்கர் சிங் 31%, அனில் பாலுனி 11% மற்றும் ஆம் ஆத்மியின் விஜய் கோத்தியால் 7 % என முதல்வர் ரேசில் இடம் பெறுகிறார்கள் என உத்தரகாண்டில் கருத்துக் கணிப்பை நடத்திய தனியார் செய்தி தொலைக்காட்சி தெரிவிக்கிறது. 

அதேபோல் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளையும், பாஜக 33 தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. தற்போதுவரை உத்தராகண்ட் தேர்தல் ரேசில் காங்கிரஸ் முந்தி வருகிறது. ஆனால், உத்தராகண்ட் தேர்தல் முடிவுகள் கடைசிநேரத்தில் இழுபறியாகவும் மாற வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்