Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம், கேரளா, மேற்கு வங்க அரசுகள் அரசியலை வியாபாரமாக வைத்து பிழைப்பவை; அண்ணாமலை ஆவேசம்

ஜனவரி 19, 2022 10:25

சென்னை : 'தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களின் அரசுகள், அரசியலை வியாபாரமாக வைத்து பிழைப்பவை. பொய்யை மூலதனமாக வைத்து பொய்யை பரப்பு கின்றன' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:

தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்கள். மத்திய அரசு, குடியரசு தின அணிவகுப்பிற்கு தமிழகத்தில் இருந்து சென்ற அலங்கார ஊர்தியை நிராகரித்து இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது, பாதுகாப்பு துறையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் முடிவு எடுக்கக் கூடியது.

அனைத்து மாநிலங்களையும், குடியரசு தின ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற செய்ய முடியாது. இடநெருக்கடி, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் சில மாநிலங்களுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படும்.

மோடி அரசு வந்த பின், தமிழக அலங்கார ஊர்திகள், 2021, 2020, 2019 என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு அணிவகுப்பில் இடம்பெற வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கடந்த, 2021ல் தமிழக ஊர்தியில் மாமல்லபுர சிற்ப கலை, 2020ல் அய்யனார் சிலை, 2019ல் காந்தியின் 150வது பிறந்த நாளை கோலாகலமாக காட்டினோம்.

மேலும், 2017, 2016ம் ஆண்டிலும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் மோடி அரசு வந்த பின் தான், தமிழகத்திற்கு ஐந்து முறை வாய்ப்பு கிடைத்தது. வேறு எந்த மாநிலத்திற்கும் இவ்வளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு, தமிழகம் வழங்கிய, 'கான்செப்ட்டை' நிபுணர் குழு பரிசீலித்தது.

அவர்கள் எடுத்த முடிவு அடிப்படையில், இந்த முறை தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது, வருத்தப்பட கூடிய விஷயம். வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோருக்கு, மத்திய அரசு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறுவது சுத்த பொய். மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் ஆகிய மூன்று மாநில அரசுகளும், அரசியலை வியாபாரமாக வைத்து கொண்டு பிழைப்பவை.

இந்த அரசுகள், பொய்யை மூலதனமாக வைத்து பொய்யை பரப்புகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்