Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய கொடி அவமதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசு

ஜனவரி 19, 2022 10:40

புதுடெல்லி : 'அரசுத் துறைகள் நிறுவனங்கள் பொதுமக்கள் மத்தியில் தேசிய கொடியை கையாள்வதில் விழிப்புணர்வு குறைபாடு உள்ளதை காண முடிகிறது. 'நம் தேசிய கொடி அவமதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: விளையாட்டு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் காகிதத்தால் செய்யப்பட்ட தேசிய கொடியை மட்டுமே பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் தேசிய கொடிகளை தனிப்பட்ட முறையில் எடுத்துச் சென்று கண்ணியமாக அப்புறப்படுத்த வேண்டும். ஆங்காங்கே தேசிய கொடிகளை வீசி எறிந்து அவமதிப்பு செய்யக்கூடாது.

இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் அரசுத் துறைகள், நிறுவனங்கள், பொது மக்கள் தேசிய கொடியை கையாளத் தெரியாமல் அவமதிக்கும் காட்சிகளை அவ்வப்போது காண முடிகிறது. கொடியை மதிப்புடன் கையாள்வதில் விழிப்புணர்வு குறைபாடு மக்களிடையே உள்ளது. எனவே மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊடக விளம்பரங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்