Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதமாற்ற முயற்சியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை?: பாஜக.,வினர் சாலை மறியல்

ஜனவரி 21, 2022 10:58

தஞ்சாவூர் : 'மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான், பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்' எனக் கூறி, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலுார் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம், 47 என்பவரின் 17 வயது மகள், மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த 9ம் தேதி மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், முருகானந்தம், மகளை வீட்டிற்கு அழைத்து சென்றார். தொடர்ந்து, மாணவியின் உடல்நிலை மோசமானதால், 15ம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

விடுதி அறைகளை துாய்மை செய்யும்படி, வார்டன் கொடுமைப்படுத்தியதால், மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்ததாக, டாக்டர்களிடம் மாணவி கூறினார். மாணவியிடம் திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி, வார்டன் சகாயமேரி, 62, என்பவரை கைது செய்தனர். நேற்று முன்தினம் மாலை, சிகிச்சை பலனின்றி மாணவி பலியானார்.

மாணவியின் உடல், நேற்று பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் பா.ஜ., மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இளங்கோ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், 'மாணவியை மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார்' எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மாணவியின் தந்தை முருகானந்தம், பா.ஜ.,வினருடன் சென்று, எஸ்.பி., ரவளிப்பிரியாவிடம் அளித்த மனுவில், 'என் மகளை சிஸ்டர் ராக்கிளின்மேரி, வார்டன் சகாயமேரி இருவரும் மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தான், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

அவர்களுடன் எஸ்.பி., பேச்சு நடத்தினார். இருப்பினும், மாணவியின் பெற்றோர் மற்றும் பா.ஜ.,வினர் மருத்துவக் கல்லுாரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. நேற்று மாலை வரை மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

இதற்கிடையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், மதம் மாறுமாறு தன் பெற்றோரிடம், சிஸ்டர் கேட்டதாகவும், அதற்கு மறுத்து விட்டதால், தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், மாணவி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

தஞ்சை எஸ்.பி., ரவளிப்பிரியா அளித்த பேட்டி: அரியலுார் மாணவியை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை, என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த மாணவி, நீதிபதிக்கு மரண வாக்குமூலம் அளிக்கும் போது, மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதாக கூறவில்லை. அவரை மதமாற்றம் செய்ய துாண்டியதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ குறித்து, விசாரணை நடத்தப்படும்.

மாணவியின் விபரங்களை வெளியிட்டவர்கள் மீது, சிறார் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஒருவரை, வீடியோ எடுத்தது மருத்துவ விதியை மீறிய செயல். மாணவி, மருத்துவமனையில் சுயநினைவோடு இருக்கும் போது, வீடியோ எடுக்கப்பட்டதா என்பதை டாக்டர்கள் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்