Saturday, 5th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழிசை, ஹெச்.ராஜா, ஜான் பாண்டியன் பிரச்சாரத்திற்கு அதிமுக தடை

மே 04, 2019 08:33

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல், வரும் 19ம் தேதி நடக்கவிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில், அதிமுகவிற்கு பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றிற்கான பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். ஆனால் இந்த நான்கு தொகுதி பிரச்சாரத்திற்கு, பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் ஆகியோருக்கு அதிமுக தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணி கட்சிகள் அவரவர் கட்சி வேட்பாளர்கள் தவிர மற்றவர்களுக்கு சரியாக பிரச்சாரம் செய்யவில்லையென்றும், சிலர் மற்ற தொகுதிகளில் பிரச்சாரத்திற்கே வரவில்லையென்றும் அதிமுக தலைமை அதிருப்தியில் உள்ளது. அதனால் இந்த நான்கையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் சொல்லிவிட்டதாக கூறுகின்றனர். 

மேலும் இன்னொரு காரணத்தையும் கூறியுள்ளனர், ஹெச். ராஜா மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். அவ்வப்போது அவர் பேசும் சர்ச்சை கருத்துகள் அவருக்கு எதிராக மாறியுள்ளது. இதனால்தான் அவரது தொகுதியிலேயேகூட அவரை அதிகமாக பேசவிடவில்லை. தமிழிசை சவுந்திரராஜனுக்கு தூத்துக்குடியில் எதிர்ப்பு இருக்கிறது. ஸ்டெர்லைட் போன்ற பிரச்சனைகள் அவருக்கு எதிராக இருக்கிறது.
 
இதனால்தான் அவரையும் பேச அழைக்கவில்லை.(ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்டது). இதுதவிர பாஜக மீது பொதுவாகவே மக்களுக்கு கோபம் உள்ளது. இயற்கை பேரிடர்களின்போது பாஜகவின் நடவடிக்கைகள், மக்களுக்கெதிரான திட்டங்களை அமல்படுத்தியது ஆகியவற்றால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

ஜான் பாண்டியனுக்கும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்குமிடையே மோதல்கள் இருந்துவருகிறது. ஜான்பாண்டியன் பிரச்சாரத்திற்கு சென்றால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று நினைத்த அதிமுக, அவருக்கும் தடை விதித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் 4 தொகுதி பிரச்சாரத்திற்கும் இவர்கள் வரவில்லையா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்