Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றினால் ஊரடங்கு தேவையில்லை: மத்திய அமைச்சர்

ஜனவரி 22, 2022 11:11

புதுடெல்லி: மக்கள் கரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றினால் முழு ஊரடங்குக்கான தேவையே இல்லை என மத்திய இணை அமைச்சர் சோபனா கரண்ஜலே தெரிவித்துள்ளார்.

"இப்போது நாம் கரோனா வைரஸுடன் வாழ வேண்டிய காலக்கட்டம். கடந்த சில மாதங்களாகவே கரோனாவுடன் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். ஊரடங்கு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மக்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து முகக்கவசம் அணிதல், கூட்டங்களைத் தவிர்த்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பழக்கங்களைப் பின்பற்றினால் நிச்சயமாக கரோனா ஊரடங்கு தேவைப்படாது" என்று கூறியுள்ளார்.

புதிதாக 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு தொற்று: இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 3,37,704 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 488 பேர் உயிரிழந்தனர். 2,42,676 பேர் தொற்றிலிருந்து குணமாகினர். நாடு முழுவதும் தற்போது 21,13,365 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 10,050 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. தினசரி பாசிடிவிட்டி விகிதம் 17.22% என்றளவில் உள்ளது.

கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு விலக்கு: கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வார இறுதி ஊரடங்கை விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கைகள் வந்தன.

இந்நிலையில் கர்நாடகாவில் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதியாவோரின் எண்ணிக்கை 5%க்கும் கீழ் உள்ளதால், வார இறுதி நாட்கள் ஊரடங்கை விலக்கிக் கொள்வதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார். அதே வேளையில் மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்