Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதித்தவர்கள் தடுப்பூசி போடுவதை 3 மாதம் தள்ளிவைக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுரை

ஜனவரி 23, 2022 12:28

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, தடுப்பூசி போடும் திட்டம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடுவது தொடர்பாக அவ்வப்போது ஆலோசனை வழங்க நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. இதுகுறித்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார மிஷன் இயக்குநர் மற்றும் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள், முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள நினைப்பவர்கள் தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகு 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்ட பிறகு ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரும் பாதிப்பில் இருந்து குணமடைந்த பிறகு 3 மாதங்கள் கழித்து 2-ம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களும் 3 மாதங்கள் கழித்தே தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை, ஐசியூ.வில் தீவிர சிகிச்சை பெறுபவர்கள், வேறு ஏதேனும் தீவிரமான நோய் உள்ளவர்கள் குணமடைந்த பிறகு தடுப்பூசிக்கு 4 முதல் 8 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்தப் பரிந்துரைகள் அறிவியல்பூர்வமாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் விகாஸ் ஷீல் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்