Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு அட்டவணை வெளியீடு

ஜனவரி 24, 2022 10:58

சென்னை : தமிழக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறைகளில், பல்வேறு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகளுக்கு, உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் 9,494 ஆசிரியர் பணி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறையில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக சேர, பி.எட்., அல்லது டி.எல்.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கான தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, உயர்கல்வி துறையில் உதவி பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பல்வேறு தேர்வுகள் குறித்த உத்தேச கால அட்டவணையை, டி.ஆர்.பி., தலைவர் லதா நேற்று வெளியிட்டார்.அதன் விபரம்:= முதுநிலை ஆசிரியர்பணியில், 2,407 இடங்களை நிரப்ப, அடுத்த மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை அடுத்த மாதம் வெளியாகும்= பள்ளிக்கல்வி துறையில் 3,902 இடைநிலை ஆசிரியர்கள்; 1,087 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 4,989 ஆசிரியர்கள் தொடர்ச்சி 3ம் பக்கம்நியமனத்துக்கான போட்டி தேர்வு, ஜூன் 2வது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை மே மாதம் வெளியாகும்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கான விரிவுரையாளர் பதவியில், 167 காலியிடங்களை நிரப்ப, ஜூன் இரண்டாம் வாரத்தில் தேர்வு நடத்தப்படும். அறிவிக்கை மே மாதம் வெளியாகும்= அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளின் உதவி பேராசிரியர் பதவியில், 1,334 இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும்.

இதற்கான அறிவிக்கை ஜூலையில் வெளியாகும்= அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 493 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு, நவம்பர் 2வது வாரத்தில் நடத்தப்படும். ஆகஸ்டில் அறிவிக்கை வெளியாகும்= அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 104 இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, டிசம்பர் இரண்டாவது வாரம் நடக்கும். செப்டம்பரில் அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டி தேர்வு ரத்து இல்லை

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பள்ளி கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்டு வந்தது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைப்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மாநில அளவிலான போட்டி தேர்வு நடத்தப்படும் என்று, இதற்கு முன் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., அரசு அறிவித்தது. அதற்கு ஆசிரியர்கள், பட்டதாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்; போட்டி தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், போட்டித் தேர்வு ரத்தாகும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அரசு பள்ளி ஆசிரியர்களாக சேர போட்டி தேர்வு நடத்தப்படும் என்று, பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும், டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. எனவே, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், இன்னொரு போட்டி தேர்வையும் எழுதினால் மட்டுமே, ஆசிரியர் வேலையில் சேர முடியும்.

தலைப்புச்செய்திகள்