Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் அரசு கிராமசபை கூட்டத்தை ரத்து செய்வதா?: கமல் கட்சி கண்டனம்

ஜனவரி 25, 2022 11:27

சென்னை: கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ‘கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரோனாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல என கமல் கட்சி தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 எதிர்பார்த்தபடியே கொரோனாவைக் காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த வி‌ஷயத்தில் அ.தி.மு.க.விற்கு சளைத்தது அல்ல தி.மு.க. என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடத்த தயாராக இருக்கும் மாநில அரசால் கிராம சபைகளை மட்டும் நடத்த முடியாதா?!

ஊராட்சித் தலைவர்கள் எப்போது வேண்டுமானாலும் தனது ஊராட்சியில் கிராம சபையைக் கூட்டலாம். அதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று ஊராட்சிகள் சட்டம் தெளிவாக சொல்கிறது.

ஆக, கிராமசபை கூட்டுவதென்பது ஊராட்சித் தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு விவகாரம் ஆகும். இதையே சமீபத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

பல ஊராட்சித்தலைவர்கள், சட்டப்படி 7 நாட்களுக்கு முன்னரே உள்ளூர் மக்களுக்கு முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு ஜனவரி 26 அன்று கிராம சபையை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். அவர்களின் ஜனநாயகக் கடமையில் குறுக்கிடும்விதமாக தமிழக அரசு கிராம சபை நடத்தத் தடை விதித்திருப்பது சட்டமீறல் மட்டுமல்ல அரசியல் சாசன அவமதிப்பும் ஆகும்.

பொங்கல் பரிசுப் பொருட்களின் தரம் பற்றியும், அதை வாங்குவதில் அடித்த கொள்ளை பற்றியும் கிராமசபைகளில் பேசப்படும். அது உள்ளாட்சித் தேர்தல் வெற்றியைப் பாதிக்கக்கூடும் எனும் ஆளும் கட்சியின் அச்சமே இதற்குக் காரணம் என சந்தேகிக்கிறோம். கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ’கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரோனாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.

உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக உரிமையில் அத்துமீறும் வழக்கத்தை தி.மு.க. அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும். கிராம சபை ரத்து எனும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வரை மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்