Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவி தற்கொலைக்கு யார் பொறுப்பு?: திமுக., மீது கமல் காட்டம்

ஜனவரி 26, 2022 10:52

சென்னை : கல்விக் கூடங்களில் நடக்கும் அத்துமீறல்களுக்கு, எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம்; மாணவி மரணத்திற்கு யார் பொறுப்பு?' என, கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம், கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மாணவி மரணத்திற்கு கட்டாய மதமாற்றம் என்றும், விடுதி வேலை, கழிப்பறை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுமே காரணம் என கூறுகின்றனர். இவற்றில் எதுவாக இருந்தாலும், அது ஏற்புடையதல்ல. பெற்றோர், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கல்வி பயிலவே; மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளை கற்கவோ அல்ல.

நுாற்றாண்டுகள் கடந்தும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஒரு விடிவு வந்தபாடில்லை. படிக்க வரும் குழந்தைகள், இதுபோன்ற சில காட்டுமிராண்டித்தனமான ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுவது அன்றாடம் நடக்கிறது. இத்தகைய அத்துமீறல்களை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் வேடிக்கை பார்த்த உயரதிகாரிகளும், மாநில அரசுமே குற்றவாளிகள்.

மாணவி தற்கொலைக்கான உண்மையான காரணத்தை, நேர்மையான விசாரணை வாயிலாக வெளிப்படுத்தி, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை: எதிர்பார்த்தபடியே கொரோனாவை காரணம் காட்டி, குடியரசு தினத்தன்று நடக்க வேண்டிய கிராம சபைகளை, தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்த விஷயத்தில், அ.தி.மு.க.,விற்கு சளைத்தது அல்ல தி.மு.க., என்பது உறுதி ஆகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயாராக இருக்கும் மாநில அரசால், கிராம சபைகளை மட்டும் நடத்த முடியாதா? 'ஊராட்சித் தலைவர்கள், எப்போது வேண்டுமானாலும் தன் ஊராட்சியில் கிராம சபையைக் கூட்டலாம்; அதற்கு கலெக்டரின் அனுமதி அவசியம் இல்லை' என, ஊராட்சிகள் சட்டம் தெளிவாக சொல்கிறது.

தமிழக அரசு, கிராம சபை நடத்தத் தடை விதித்திருப்பது, சட்டமீறல் மட்டுமல்ல; அரசியல் சாசன அவமதிப்பும் ஆகும். கிராம சபை ரத்து எனும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்