Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல் அணியாக 1000-வது ஒருநாள் போட்டியில் ஆடும் இந்தியா - வெஸ்ட் இண்டீசுடன் நாளை மோதல்

பிப்ரவரி 05, 2022 07:26

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி புதிய வரலாற்றை படைக்கிறது. 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை புரிய உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி 5-ந் தேதி மெல்போர்னில் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்திய அணி முதல் முறையாக 1974-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது.இதில் 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது.

ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை உலகளவில் 28 அணிகளால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. ஐ.சி.சி.யின் அங்கீகாரம் படி டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 அணிகளுக்குத்தான் நிரந்தர ஒருநாள் போட்டி அணி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் அந்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருநாள் ஆட்டத்தில் 1000-வது போட்டியில் விளையாட உள்ள முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதற்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியா அந்த நிலையை அடையும்.

ஆயிரமாவது ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார்.

முதல் போட்டிக்கு அஜீத் வடேகரும், 100-வது போட்டிக்கு கபில்தேவும், 200-வது மற்றும் 400-வது போட்டிக்கு அசாருதீனும், 300-வது போட்டிக்கு தெண்டுல்கரும், 500-வது போட்டிக்கு கங்குலியும், 600-வது போட்டிக்கு ஷேவாக்கும், 700, 800, மற்றும் 900-வது போட்டிகளுக்கு டோனியும் கேப்டனாக இருந்துள்ளனர்.

புதிய சாதனை நிகழ்த்த உள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 2 உலக கோப்பையை வென்றுள்ளது. 1983-ல் கபில்தேவ் தலைமையிலான அணியும், 2011-ல் டோனி தலைமையிலான அணியும் உலக கோப்பையை வென்று கொடுத்தன.

இது தவிர ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை (2002, 2013) கைப்பற்றியது, 1985-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது, 1998-ல் சுதந்திரதின கோப்பையை கைப்பற்றியது, 2002-ல் நாட்வெஸ்ட் டிராபியை கைப்பற்றியது. 2008-ல் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது உள்ளிட்டவை முக்கியமானது ஆகும்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங் குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 1000-வது போட்டி என்பதால் இந்திய அணி விளையாடும் ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ரோகித் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு விளையாட உள்ள முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். நாளைய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

நாளைய போட்டியில் இரு அணிகளிலும் விளையாடலாம் என்று எதிர் பார்க்கப்படும் 11 வீரர்கள் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரி‌ஷப்பண்ட், வாஷிங் டன் சுந்தர், ‌ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், சிராஜ், சாஹல்.

வெஸ்ட் இண்டீஸ்: பொல்லார்ட் (கேப்டன்), ‌ஷய் ஹோப், பிரன்டன் கிங், புரூக்ஸ், பூரன், ஹோல்டர், பேபியன் ஆலன், ஷெப்பர்டு, ஓடியன் சுமித், அல்ஜாரி ஜோசப், கேமர்ரோச்.
 

தலைப்புச்செய்திகள்