Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹிஜாப் விவகாரம்: குண்டாப்பூர் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் நின்ற 2 பேர் கைது

பிப்ரவரி 07, 2022 10:23

உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, சில கல்லூரிகளில், இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள், குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். 

உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசுக் கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனையடுத்து, பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவிகளும் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்றனர். ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாங்கள் காவி ஷால் அணிந்து தான் கல்லூரிக்கு வருவோம் என்று அவர்கள் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், குண்டாப்பூர் கல்லூரியின் அருகில் ஆபத்தான ஆயுதங்களுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பெயர் அப்துல் மஜீத் (வயது 32), ரஜாப் (வயது 41) என்பதும், அவர்கள் இருவரும் குண்டாப்பூர் அருகே உள்ள கங்கோலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும்  தெரியவந்துள்ளது. 

கல்லூரியின் அருகில் 5 பேர் ஆயுதங்களுடன் வந்திருந்ததாகவும், அவர்களில் 3 பேர் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 2 பேர்  மீதும் குண்டாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் அரசியல் கட்சிகளின் கைகளில், கருவிகள் ஆக வேண்டாம் என கல்வியமைச்சர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்