Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் மனதை கவரும் பனிக்கட்டி உணவகம்: சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு

பிப்ரவரி 07, 2022 10:27

ஸ்ரீநகர்: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைவதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமான காஷ்மீரிலும் ஏராளமான மக்கள் சுற்றுலாவுக்கு மக்கள் குவிந்து வருகின்றனர். குளிர்காலம் என்பதால் காஷ்மீர் பனி போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அதுவும் முக்கிய இடமான குல்மார்கில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இக்லூ எனப்படும் பனியால் கட்டப்படும் வீட்டை போல உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் கோலஹோய் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கிற எஸ்கிமோக்கள் இவ்வாறான வீடுகளை கட்டி வாழ்வார்கள். வெளியே எவ்வளவு குளிராக இருந்தாலும் இக்லூ வீடுகளில் வெதுவெதுப்பான சீதோஷ்ணம் நிலவும் என்பதுதான் சிறப்பம்சம்.

37.5 அடி உயரமும், 44.5 அடி அகலமும் கொண்ட இந்த உணவகத்தில் மேஜைகளும் பனிக்கட்டியால் அமைக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் உணவுகள் சூடாக, சுவையாக பரிமாறப்படுகிறது. ஒரே நேரத்தில் 40 பேர் அமர்ந்து சாப்பிடலாம்.

சுவிட்சர்லாந்தில் 33.8 அடி உயரமும், 42.4 அடி அகலமும் கொண்ட உலகின் பெரிய பனிக்கட்டி உணவகம் அமைக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது. அதை விட குல்மார்கில் பெரிதாக தற்போது பனிக்கட்டி உணவகம் உருவாகி அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி இந்த உணவகம் அமைக்கும் பணி தொடங்கி கடந்த 4-ந் தேதி நிறைவடைந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது. மைனஸ் 10 டிகிரி வெப்பநிலையில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த உணவகம் தற்போது சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. மார்ச் 15-ந் தேதி வரை இந்த பனிக்கட்டி உணவகம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்