Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை வார்டுகளில் அனல் பறக்கும் பிரசாரம்

பிப்ரவரி 11, 2022 11:31

சென்னை:

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

 


இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் தி.மு.க.- அ.தி.மு.க. இடையே கடும் நேரடி பலப்பரீட்சை ஏற்பட்டு இருக்கிறது.

இது தவிர பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய 6 கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் தேர்தல் களத்தில் 8 முனை போட்டியுடன் கடும் போட்டி நிலவுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கி உள்ள அனைத்து வேட்பாளர்களும் கடந்த 7-ந் தேதி தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்கள். தற்போது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு, வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காலை மற்றும் மாலை நேரங்களில் கட்சிக் கொடிகளுடன் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் வலம் வருகிறார்கள். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேர்தல் களம் களை கட்டி காணப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந் தேதியுடன் ஓய்கிறது. இதனால் மக்களை நேரில் சந்தித்து இன்னும் 6 நாட்கள் மட்டுமே ஆதரவு திரட்ட முடியும் என்கிற நிலை உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி பிரமுகர்களும், வேட்பாளர்களும் இடைவிடாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிகாலையிலேயே பிரசாரத்தை தொடங்கிவிடும் வேட்பாளர்கள் மதிய வேளையில் மட்டும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்கள். பின்னர் மீண்டும் பிரசாரத்தை தொடங்கி இரவு 10 மணிவரை மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்கள்.
 

அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு சவால்விடும் வகையில் சில வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தில் கலக்குகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் மாறி உள்ளது.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் தி.மு.க. தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. அக்கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தினமும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 6-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலினின் காணொலி பிரசார கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற குறைகளை எடுத்துக் கூறியும், தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரு மான எடப்பாடி பழனிசாமி நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 6-ந்தேதி சேலத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர், நெல்லை, தூத்துக்குடியில் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னை வந்தும் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த பிரசாரத்தின் போது தி.மு.க. அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குறை கூறி எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசி வருகிறார்.

இதேபோன்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தொடர்ந்து தஞ்சை, கும்பகோணத்திலும் ஆதரவு திரட்டினார்.

சென்னையில் அவர் நாளை (சனிக்கிழமை) 3 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை மதியம் 3 மணியளவில் தென்சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் சென்னை மாநகராட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

மாலை 5 மணிக்கு சென்னை புறநகர் பகுதியிலும், இரவு 7 மணிக்கு தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சென்னை அ.தி.மு.க.வினர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

தி.மு.க. மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி. இன்று ராஜபாளையம், நெல்லையில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவு சென்னை திரும்புகிறார். நாளை (சனிக்கிழமை) மாலை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை மாலை 4 மணியளவில் திருவொற்றியூர் செல்லும் கனிமொழி அங்குள்ள வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். கனிமொழி பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை தி.மு.க. நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரசாரம் மேற்கெண்டார். அதன் பிறகு காணொலி வாயிலாக வேட்பாளர்களுடனும் அவர் கலந்துரையாடினார். வீடியோக்கள், அறிக்கைகள் மூலம் கமல்ஹாசன் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 

இப்படி கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் பிரசாரத்தை முடுக்கிவிட்டு இருப்பதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்