Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எதிர்க்கட்சி தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது: பசவராஜ் பொம்மை விமர்சனம்

பிப்ரவரி 23, 2022 10:38

பெங்களூரு: கர்நாடக சட்டசபை நேற்று காலை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் 5-வது நாளாக தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்தார். அவர் காங்கிரசாரின் கடும் அமளிக்கு இடையே பேசும்போது கூறியதாவது:-

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி கலந்து கொள்ளவில்லை. வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி பங்கேற்காமல் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது ஒரு கரும்புள்ளி. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும்போது ஒரு எதிர்க்கட்சியான காங்கிரஸ் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது இதுவே முதல் முறை.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு அரசின் குறைகள், தவறுகளை காங்கிரஸ் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். கர்நாடகத்தில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் சுகாதாரத்துறையை புறக்கணித்தது. பா.ஜனதா ஆட்சியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.3 ஆயிரம் கோடி வழங்கினோம்.

நமது நாட்டில் கொரோனா தடுப்பூசி வேகமாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் இருந்த 2½ லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து தொகுப்பு வழங்கப்பட்டது.

கொரோனாவால் உயிரிழந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி உதவி வழங்கியுள்ளோம்.

வட கர்நாடகத்தில் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு ரூ.1,752 கோடி நிவாரணம் வழங்கியுள்ளோம். வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.400 கோடி வழங்கி இருக்கிறோம். பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாநில அரசு தலா ரூ.4 ஆயிரம் வழங்குகிறது. அதன்படி கர்நாடக அரசு ரூ.2 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறோம். பெங்களூரு நகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆயுஸ்மான் திட்டத்தில் 8.24 லட்சம் அடையாள அட்டைகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கியுள்ளோம். வீட்டு வசதித்துறையில் புதிதாக 5 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. பிரதமர் அவாஸ் திட்டத்தின் கீழ் 2½ லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராம ஒன் திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதில் கிராம பஞ்சாயத்துகளில் 100 சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். புதிய தேசிய கல்வி கொள்கையை முதல்கட்டமாக உயர்கல்வியில் அமல்படுத்தியுள்ளோம். வரும் ஆண்டில் இந்த தேசிய கல்வி கொள்கை பள்ளி கல்வித்துறையிலும் செயல்படுத்தப்படும். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ஏழை மக்களுக்கு ஒரு கிலோ அரிசியை கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 54 லட்சம் தனிநபர் கழிவறைகளை கட்டி கொடுத்துள்ளோம். வருகிற பட்ஜெட்டில் கல்யாண கர்நாடக பகுதிக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஓதுக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சபாநாயகர் காகேரி அறிவித்தார்.

தலைப்புச்செய்திகள்