Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

74வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி மரியாதை

பிப்ரவரி 24, 2022 01:37

சென்னை:  மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா இன்று அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்படுகிறது.
 இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள், ஜெயலலிதாவின் சிலைகள் மற்றும் படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதே போல சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவிக்க காலை 10 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் வந்தபோது அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோ‌ஷமிட்டனர்.

ராயப்பேட்டை ரவுண்டானா அருகில் இருந்து கட்சி அலுவலகம் வரை அ.தி.மு.க. தொண்டர்கள் அவர்களை வரவேற்று கொடிகளுடன் நின்றனர். கட்சி அலுவலகத்திற்கு அடுத்தடுத்து வந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் இருவரும் மாலை அணிவித்தார்கள்.

அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ‘‘புரட்சித்தலைவி வாழ்க’ என்று கோ‌ஷம் எழுப்பினார்கள். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், பா.பென்ஜமின், எஸ்.பி. வேலுமணி, மா.பாண்டியராஜன், கே.பி.அன்பழகன், தங்கமணி, கோகுல இந்திரா, வளர்மதி மற்றும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன், துணை செயலாளர் இ.சி.சேகர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. கட்சி கொடியை வைத்து இனிப்பு வழங்கினார்கள். பின்னர் இருவரும் கட்சி அலுவலகத்திற்குள் சென்று சிறிது நேரம் இருந்தனர்.

முன்னதாக அவர்களை அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கட்சி அலுவலகம் இன்றும் வழக்கம் போல் காட்சி அளித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவிய போதும் கூட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க.வினர் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் எப்போதும் போல உற்சாகமாக காணப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, தி.நகர் சத்யா மற்றும் இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், சொ.கடும்பாடி, அண்ணாதுரை, பி.டி.சி.முனுசாமி, இ.லட்சுமி நாராயணன், வெற்றி நகர் மு.சுந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்