Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

90 சதவீத அதிமுகவினர் சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை: அருண்மொழித்தேவன் எம்எல்ஏ பேச்சு

மார்ச் 03, 2022 12:22

புவனகிரி: 90 சதவீத அ.தி.மு.க.வினர் சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதே தொண்டர்களின் எண்ணம் எனவும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினரிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுகுறித்து கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே சசிகலா அ.தி.மு.க. உறுப்பினரே கிடையாது.

90 சதவீத அ.தி.மு.க.வினர் சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தும். அவரை மீண்டும் கட்சியில் சேர்கக்கூடாது என்பதே தொண்டர்களின் எண்ணம்.

பெரியகுளத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தேவையற்றது. இது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்துள்ளது. அது தற்காலிகம் தான். மீண்டும் அ.தி.மு.க. எழுச்சிபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்