Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி மனு

மார்ச் 04, 2022 11:31

சென்னை : துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு சார்பில், முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனுவில் கூறியிருப்பதாவது: 'ஸ்டெர்லைட்' ஆதரவு கூட்டமைப்பில், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கனரக வாகனங்கள் பழுது பார்ப்போர், மூலப்பொருள் சப்ளை செய்வோர், ஒப்பந்ததாரர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் உள்ளனர்.அனைவரும் ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள். ஆலையை மீண்டும் திறந்தால் மட்டுமே, எங்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படும்.

துாத்துக்குடி தொழில் நகரமாகவும், வர்த்தக நகரமாகவும் இருப்பதற்கு துறைமுகம் தான் காரணம். திடீரென ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், துாத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் மற்றும் தளவாட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் கணிசமான வருவாயை இழந்துள்ளது.

துாத்துக்குடியின் பொருளாதார இழப்பு, ஆண்டுக்கு 600 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இந்திய தாமிர தொழிலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டெர்லைட், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்று, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியது வரவேற்கத்தக்கது. துாத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கும் ஆலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

துாத்துக்குடி மக்களின் வளர்ச்சியாகவும், பொருளாதார முதுகெலும்பாகவும் விளங்கிய, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆலையை வாழ்வாதாரமாக வைத்து இயங்கி வந்த தொழிலாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. துாத்துக்குடியின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற, எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க வழிவகை செய்ய வேண்டும்.

தலைப்புச்செய்திகள்