Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொடைக்கானல் மலைப்பகுதியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

மார்ச் 06, 2022 06:12

கொடைக்கானல்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குளுமையைத் தேடி கொடைக்கானல் மலைப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதைத் தவிர்க்க வார இறுதிநாட்களில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் கடந்த இரண்டு தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அதிகம் காணப்பட்டனர்.

மோயர் சதுக்கம், பைன் மரக்காடு, தூண்பாறை, குணாகுகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களின் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் ஓட்டியும், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

கொடைக்கானல் ரோஸ்கார்டன் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தரைப்பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக கொடைக்கானலில் காலை முதல் பகல் வரை மிதமான வெப்பம் காணப்பட்ட போதிலும், இதமான குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உணரப்படவில்லை. மாலை முதல் அதிகாலை வரை குளுமையான தட்பவெப்பநிலை நிலவியது.

கொடைக்கானலில் அதிகபட்சமாக பகலில் 21 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 11 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவுகிறது.  கோடை காலம் தொடக்கத்திலேயே தமிழகத்தின் பிற பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் வரும் நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தலைப்புச்செய்திகள்