Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற வாய்ப்பில்லை: கடம்பூர் ராஜூ

மார்ச் 11, 2022 03:01

கோவில்பட்டி: முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி எம்எம்ஏ.,வுமான கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தினை இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் அதிமுக ஆதரித்துள்ளது. நாட்டு நலன் கருதி இந்த கருத்தினை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிரதமர் மோடி கூறினால் அரசியல் ரீதியாக பார்க்கப்பட்டது. ஆனால் அதை நடைமுறை படுத்துகின்ற தேர்தல் ஆணையமே இன்றைக்கு கூறியிருப்பது வரவேற்கக் கூடியது.

நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அந்த நடைமுறையை கொண்டு வருவது சவாலான விஷயம்தான். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக பண வீக்கம் குறையும், மக்களுக்கு பிரச்னை இல்லாத சுமுகமான நிலை ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கக் கூடியது. 2021ல் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து இருந்தாலும் நாங்கள் வரவேற்று இருப்போம்.

தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற வாய்ப்பில்லை.1967 க்கு பின்னர் தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டு திராவிடக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதில் அதிமுக தான் அதிகளவில் ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளது. எங்களுக்கு மாற்றாக சில நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. என்றைக்குமே திராவிட கட்சிகள் ஆட்சி தான் என்பது தமிழக வாக்காளர்களின் மனதில் உள்ளது. அது இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்