Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 680 நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு இல்லை

மார்ச் 12, 2022 11:13

சென்னை: தமிழகத்தில், கடந்த 680 நாட்களுக்கு பிறகு கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2020 ஏப்ரல் 30ல் கோவிட் ஏதும் பதிவாகவில்லை.

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 112 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டனர். 327 பேர் குணமடைந்தனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது 1,461 பேர் கோவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 16ல் கோவிட் தொற்று ஏதும் பதிவாகவில்லை. 8 மாவட்டங்களில் தலா ஒருவர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2020 மார்ச் 25 ல் மதுரை அரசு மருத்துவமனையில் முதலாவது கோவிட் உயிரிழப்பு பதிவானது. பல இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 54 வயதான நபர், கோவிட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பின்னர் தினசரி உயிரிழப்பு பதிவான நிலையில் 2020 ஏப்.,30 ல் கோவிட் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதன் பிறகு 680 நாட்களுக்கு பிறகு நேற்று தான் கோவிட் உயிரிழப்பு பதிவாகவில்லை.

முதலாவது அலையின் போது அதிகபட்சமாக 2020 ஆக.,15ல் 127 பேரும், இரண்டாவது அலையின் போது அதிகபட்சமாக 2021 மே 30ல் 493 பேரும் , 3வது அலையின் போது கடந்த ஜன.,27 ல் 53 பேரும் உயிரிழந்திருந்தனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களுடன் ஒப்பிடுகையில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் பெருந்தொற்றில் மோசமான நாளாக 2021 மே 30 அமைந்தது. அன்றைய தினம் போதுமான அளவு படுக்கை, ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் கையிருப்பு இல்லை எனக்கூறினார்.

பொது சுகாதார இயக்குநர் செல்வரத்தினம் கூறுகையில்; தமிழகத்தில் 90 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 70 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். மூன்றாவது அலையின் போது கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருந்தது எனக்கூறினார்.

தலைப்புச்செய்திகள்