Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிக எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி: மக்களுக்கு அகிலேஷ் யாதவ் நன்றி

மார்ச் 12, 2022 11:32

லக்னோ,:''கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், இரண்டரை மடங்கு கூடுதல் எம்.எல்.ஏ.,க்கள் தந்துள்ள உத்தர பிரதேச மக்களுக்கு நன்றி,'' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார்.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசை தோற்கடிக்க வேண்டும் என, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சிறிது நேரத்திலேயே, தன் கனவு பொய்யாகி போனதை அவர் உணர்ந்து கொண்டார்.

முடிவில், பா.ஜ., மட்டும் 255 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னேறியது.ஓட்டு எண்ணிக்கை நடந்தபோது, கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த அகிலேஷ் யாதவ் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:உத்தர பிரதேச மக்கள், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை இரண்டரை மடங்கு உயர்த்தி உள்ளனர்; அவர்களுக்கு என் நன்றி. இதன் வாயிலாக பா.ஜ., வெற்றி பெறும் இடங்களை குறைக்க முடியும் என காட்டியுள்ளோம்.
இந்தப் பணியுடன், எங்கள் போராட்டங்களும் தொடரும். புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.கடந்த 2017 சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி 47 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி, 125 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

தலைப்புச்செய்திகள்