Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முல்லை பெரியாறு அணைக்கு அனுமதியின்றி சென்ற போலீசார் மீது வழக்கு

மார்ச் 17, 2022 12:11

கூடலூர்: முல்லை பெரியாறு அணை பகுதிக்கு அனுமதியின்றி சென்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணைக்கு அனுமதியின்றி சென்ற போலீசார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வளையத்தில் உள்ள முல்லை பெரியாறு அணைக்கு அலுவல் பணிக்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்று வருகின்றனர்.

இவர்கள் தேக்கடியிலிருந்து படகு மூலமாகவும், வல்லக்கடவிலிருந்து வனப்பகுதி வழியாகவும் வாகனத்தில் செல்கின்றனர். இவ்வாறு அணை பகுதிக்கு செல்பவர்கள் வருகைப் பதிவேட்டில் தங்களது பெயர் மற்றும் என்ன காரணத்திற்காக செல்கிறோம் என்ற விவரங்களை எழுதி வைத்துவிட்டு செல்லவேண்டும்.

கடந்த 13ம் தேதி தமிழக பொதுப்பணித்துறை படகு அணைப்பகுதிக்கு செல்லும்போது கேரளா ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் அப்துல்சலாம், ஹக்கீம் மற்றும் கேரளாவை சேர்ந்த டெல்லி போலீஸ் அதிகாரி ஜான்சன், அவரது மகன் வர்க்கீஸ் ஆகிய 4 பேரும் தேக்கடியிலிருந்து தமிழக பொதுப்பணித்துறை படகில் பெரியாறு அணைக்கு சென்றனர்.

ஆனால் வருகைப்பதிவேட்டில் இவர்கள் அணைக்கு சென்றது குறித்து எந்த தகவலும் பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து பெரியாறு அணை போலீஸ் டி.எஸ்.பி. நந்தன்பிள்ளையிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் அணை பகுதிக்கு அனுமதியின்றி சென்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், பாதுகாக்கப்பட்ட பெரியாறு அணை பகுதிக்குள் செல்பவர்கள் குறித்த வருகைப்பதிவேட்டை உறுதிப்படுத்த சொல்லி 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். அடையாளம் தெரியாத நபர்கள் அணை பகுதிக்கு செல்வதால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே அணை பகுதிக்கு சென்ற 4 பேரை கேரளா அதிகாரிகள் எதற்காக அனுமதித்தனர் என்ற விவரத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

பெரியாறு அணை தேனி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டால்தான் அணை பகுதிக்குள் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். தமிழக படகில் கேரளாவை சேர்ந்தவர்கள் எந்த காரணத்திற்காக ஏற்றிச் செல்லப்பட்டார்கள்? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்