Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநில கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு: அமைச்சர் பொன்முடி தகவல்

மார்ச் 17, 2022 12:21

சென்னை: மாநில கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.கார்த்திகேயன், மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ஏ.ராமசாமி, சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.கவுரி, பதிவாளர் என்.மதிவாணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்து வருவதாக உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது என்றால், அதற்கு காரணங்கள் இல்லாமல் இருக்காது. அந்தக் காரணங்களை விவாதிப்பதற்காகத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் உயர்தரக் கல்விக்குப் புகழ்பெற்றது. எனவே, இதன் கல்வித் தரத்தை மீண்டும் உயர்த்துவது குறித்து, கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்களின் ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் `நான் முதல்வன்' என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கைக்கும், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் கல்விக் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கலாம்.

புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், புதிய கல்விக் கொள்கையில் ஏராளமான குறைபாடுகள்தான் உள்ளன. அவற்றைக் களைய வேண்டியது அவசியம். அதனால்தான் மாநில கல்வித் திட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறோம்.

அந்த வகையில், மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு அமைக்கப்படும்.

இல்லம் தேடி கல்வித் திட்டம் தமிழக முதல்வரின் திட்டமாகும். குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று கல்வி கற்றுக் கொடுக்கும் திட்டம், எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறைதான். எனவே, இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கும், புதிய கல்விக் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

தலைப்புச்செய்திகள்